பரத வம்சம்

Share this!
 • 56
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  56
  Shares

துஷ்யந்தன் கண்வரின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய பிறகு கண்வர் ஆசிரமம் திரும்பினார். அங்கு நடந்தவற்றை சகுந்தலையின் மூலமாகக் கேட்டுத் தெரிந்த கொண்டவர் துஷ்யந்தன் நன்நடத்தை கொண்ட மன்னன் என்பதால் சகுந்தலைக்கு ஆறுதல் கூறினார். துஷ்யந்தன் நிச்சயமாக வந்து அழைத்துச் செல்வான் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாதங்கள் சென்றன. சகுந்தலை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால். அவனுக்கு பரதம் எனப் பெயர் சூட்டப் பட்டது. மாதங்கள் பல கடந்தும் துஷ்யந்தன் சகுந்தலையை அழைத்துச் செல்ல வரவில்லை. தன்னை துஷ்யந்தனே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த சகுந்தலையிடம், தேவர்கள், பெரியோர், அரசர், கணவர் ஆகியோரிடத்து நாமே செல்வது தகும், அவர்கள் வந்து அழைக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது என்று கண்வர் கூறினார்.

நாட்டிற்கு பரதனோடு சென்று துஷ்யந்தனைச் சந்தித்து அவனோடு வாழுமாறு அறிவுறுத்தி சகுந்தலையை அனுப்பினார் கண்வர். துஷ்யந்தனின் அரண்மனைக்குச் சென்ற சகுந்தலை, அங்கே தன்னை அறிமுகப்படுத்தினாள். முன்னர் நடந்த காந்தர்வ விவாஹத்தையும், துஷ்யந்தன் தன்னோடு கூடியதையும், அவர்களுக்குப் பிறந்த மகன் பரதனையும் துஷ்யந்தனிடத்தே நினைவுபடுத்தினாள். ஆனால் அவளையும், விவாஹத்தையும் தனக்கு நினைவில் இல்லையென துஷ்யந்தன் கூறிவிட சகுந்தலை கோபமும் அதிர்ச்சியும் அடைந்தாள். கோபத்தோடு, ஒருவர் தனிமையில் செய்யும் செயல் பிறருக்குத் தெரிவதில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் ஐவகை பூதங்களான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று மேலும் செயலாற்றுபவரின் மனம், கடவுள், காலை, மாலை, காலை மாலை சந்திக்கும் சந்திப் பொழுது ஆகியன சாட்சிகளாக ஆகின்றன. நீர் கூறுவது பொய்யென உமக்கே தெரியும் என்று கோபத்தோடு வாதிட்டாள்.

ஆனால் துஷ்யந்தன் அவளைக் கெட்ட நடத்தை உள்ளவள் என்று நிந்தித்து செல்வம் வேண்டுமென்றால் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினான். இதைக் கேட்டுப் பெரிதும் சினந்த சகுந்தலை பரதனோடு வெளியேற எத்தனித்து, தேவதைகள் எனக்கு சாட்சியங்கள், ஆனால் அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆகையால் நான் போகிறேன் என்றாள். அவளின் கோபத்தால் அவள் சிரசிற்கு மேலை அக்னி ஜ்வாலை கிளம்பியது.

அப்போது அசரீரி துஷ்யந்தனுக்கு சகுந்தலையோடு நிகழ்ந்த காந்தர்வ விவாஹத்தையும் அவர்களின் புத்திரனே பரதன் எனவும், பரதனால் இராஜ்ஜியத்திற்குப் பெரும் புகழ் சேருமென்றும், அந்த வம்சமே பரதன் பெயர் கொண்டு பாரதர்கள் என்று அறியப்படுவார்கள் என்றும் பரதனால் ஆளப்படும் பிரதேசம் பாரதம் என்று அறியப்படும் என்றும், அவர்களை ஏற்பதே தகும் என்று ஒலித்தது.

பின்னர் துஷ்யந்தன் சகுந்தலையை பட்டத்து மகிஷியாகவும் பரதனை பட்டத்து இளவரசனாகவும் சபை முன்னிலையில் அறிவித்தான். மேலும் தகுந்த காரணமின்றி அவளை ஏற்று கொண்டால் மக்கள் தம் பட்டத்துமகிஷியின் மேல் சந்தேகம் கொள்ளலாம் இராஜ்ஜியத்திற்கு அது தகாது என்பதாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக விளக்கி, சகுந்தலையிடம் மன்னிப்புக் கோரினான். பின்னாளில் பரதனிடம் இராஜ்ஜியத்தை ஒப்படைத்து விட்டு கானகம் சென்று இராஜரிஷியாக தவம் செய்யத் தொடங்கினான்.

பரதனின் ஆட்சிக் காலத்தில் தர்மம் செழித்தது, இராஜ்ஜியம் விஸ்தீரணம் செய்யப்பட்டது. மக்கள் நோய் துன்பமின்றி மகிழ்வோடு வாந்தார்கள். பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றி இராஜ்ஜிய விஸ்தீரணம் செய்தபடியால் சகல பூமியையும் ஆள்பவன் என்று பொருள் படும் வகையில் சார்வ பௌமன் என்று அழைக்கப்பெற்றான். யாகமொன்றை வளர்த்து அதன் மூலம் தனக்குப் பிறந்த பூமன்யூ என்பவனுக்கு முடி சூட்டினான் பரத மஹாராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *