ஸ்ருங்கி பரிக்ஷித்து மஹாராஜாவை சபித்தல்

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அஸ்தினாபுரம் வந்தடைந்த உத்தங்கர் ஜனமேஜயனைச் சந்தித்தார்.

ஜனமேஜயனிடம் உனது தந்தையாகிய பரீக்ஷித்து மஹாராஜா தர்ம எண்ணம் கொண்டவர். அவருடைய ஆட்சியில் விதவைகளும், கர்ப ஸ்த்ரீக்களும் பாதுகாப்பாக இருந்தனர். மக்களின் வாழ்வு மேம்பட சிறப்பாக ஆட்சி புரிந்தவர். ஆனால் அவரை தக்ஷகன் என்ற பாம்புகளின் அரசன் தீண்டிக் கொன்று விட்டான்.

ஆகையால் நீ பாம்புகளைக் கொல்லும் பொருட்டு சர்ப்ப யாகம் ஒன்றினை நடத்த வேண்டும். மேலும் என்னுடைய குருபத்தினிக்குக் காணிக்கையாக அளிக்க நான் குண்டலங்களை யாசகம் பெற்று சென்று கொண்டிருந்த போது அதைக் களவாடி எனக்கும் பெரும் துன்பம் கொடுத்தான். ஆகையால் நீ நிச்சயம் சர்ப்ப யாகம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உத்தங்கரின் மொழிகளைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், தனது மந்திரிமார்களிடம் ஆலோசனை நடத்தினான். தன்னுடைய தந்தை பரிக்ஷித்து மஹாராஜா எவ்வாறு மரணமடைந்தார் என்பது குறித்து கேட்டு அறிய முற்பட்டான். அவனுடைய மந்திரிமார்கள் நடந்தவற்றை விவரித்தனர்.

பரிக்ஷித்து மஹாராஜா சாபம் பெறுதல்:

ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற பரிக்ஷித்து மஹாராஜா மான் ஒன்றை வேட்டையாடினான். அவனது அம்பு பட்டு காயமுற்ற மான் துள்ளிக் குதித்து ஓடியது. அதை விரட்டிக் கொண்டு வந்த பரிக்ஷித்து ஒரு முனிவரின் ஆசிரமத்துக்குள் பிரவேசித்தான். அங்கிருந்த ரிஷி மௌனம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்.

மானைத் தேடி வந்த பரிக்ஷித்து ரிஷியிடம் அடிபட்ட மான் இவ்விடம் வந்ததா என்று வினவ, மௌனம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தமையால் ரிஷி பதில் ஏதும் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த பரிக்ஷித்து அங்கு கிடந்த இறந்த பாம்பினை தன் அம்பு ஒன்றால் தூக்கி ரிஷியின் கழுத்தில் மாலையாக அணிவித்துச் சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஸ்ருங்கி என்ற ரிஷி அங்கு நடந்தவற்றை அறிந்தார். அவர் மௌனம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த ரிஷியின் புத்திரர். பரிக்ஷித்துவின் செயலால் கோபம் அடைந்த ஸ்ருங்கி முனிவர், இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் பரிக்ஷித்து பாம்பரசனான தக்ஷகன் தீண்டி இறப்பான் என்று சாபம் கொடுத்தார்.

மௌனம் முடித்த ரிஷி தம் புத்திரனிடம் ரிஷிகள் இவ்வாறு சினந்து சாபம் அளிப்பது தவறு, மேலும் அரசன் தர்ம காரியங்கள் செய்வதாலும் ரிஷி முனிவர்களை அரவணைப்பதாலுமே உலகத்தில் தர்ம காரியங்கள், யாகங்கள் நடைபெறுகிறது என்றும் அறிவுரை கூறுகிறார். மேலும் காட்டிற்கு சென்று காய் கனிகளை மட்டும் உண்டு வாழுமாறும் இதனால் கோப குணம் மறைந்து மனம் ஒருநிலைப்படும் என்றும் உரைக்கிறார்.

பின்னர் பரிக்ஷித்துவைச் சந்தித்து தம் மகன் அளித்த சாபம் குறித்து விளக்குகிறார். சாபம் குறித்தோ இன்னும் ஏழு நாட்களில் மரணிக்கப் போவதைக் குறித்தோ பெரிதும் வருந்தாத பரிக்ஷித்து ரிஷிகளிடம் பட்ட அபச்சாரத்திற்குப் பெரிதும் வருந்தி அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *