ஸ்ரீ வேத வியாசர்

Share this!
 • 63
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  63
  Shares

இவ்வாறு இருக்க ஒரு நாள் சந்தணு மஹாராஜா யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது நல்ல மணம் வீசியது. சுற்றும்முற்றும் அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடலானார். அப்போது அங்கு பரிசல் இயக்கிக் கொண்டிருந்த பெண்ணை மட்டும் கண்டார். அவளிடமே இருந்து அவ்வாசம் வருகிறது என்று கண்டு கொண்டார். அவளருகில் சென்று “நீ யார், எவ்வாறு உன் உடலில் இருந்து இவ்வகை வாசம் வீசுகிறது” என்று கேட்டார். அவள் மீனவ குலத் தலைவரின் மகள் என்றும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரிசல் இயக்குவதாகவும் கூறினாள்.

மேலும் தன் உடலில் எவ்வாறு இவ்வகை வாசம் வீசுகிறது என்ற முன்நடந்த சம்பவத்தைக் கூறலானாள். முன்னொருமுறை பராசர மகரிஷி பரிசலில் பயணம் செய்ய வந்தார். அப்போது அவளது உடலில் இந்த வகை நறுமணம் கிடையாது, மீன்களின் வாசமே வீசும், ஆதலால் அவள் மச்சகந்தி என்றே அழைக்கப்பட்டாள். மச்சன் என்றால் மீன், கந்தி என்றால் மணம். பராசரர் அப்படிப் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் ஓர் அபூர்வ நக்ஷத்திர சங்கமம் ஏற்பட்டது. மனிதகுலத்திற்கு பெரும் தர்மங்களையும், உபதேசங்களையும் அளிக்கவிருக்கும் ஒருவரின் பிறப்பு நடக்கவேண்டிய சமயம் என்பதை அறிந்து கொண்டார். ஆனால் பரிசலில் நடுவே இது எவ்வாறு சாத்தியம் என்று யோசித்தார்.

பிறகு அவர் மச்சகந்தியிடம் இது குறித்து விரிவாக விளக்கி அவளோடு கூட வேண்டும் என்றும் இதனால் அவள் மூலம் தெய்வ சங்கல்ப்ப காரியம் நிறைவேறும் புண்ணியமும் கிடைக்கும் என்று கூறினார். ஆனால் மச்சகந்தி தான் ஒரு கன்னிப்பெண் என்றும் குழந்தை பிறந்த பிற்பாடு அவளால் எவ்வாறு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள இயலும் என்று கேட்டாள். அதற்குப் பராசரர் இது ஒரு தெய்வ சங்கல்ப்பக் காரியம் என்றும், குழந்தை பிறந்த பின்னே அவள் மீண்டும் கன்னித்தன்மையை அடைவாள் என்று கூறினார். அதற்கு உடன்பட்ட மச்சகந்தி இது திறந்தவெளி மேலும் தாங்கள் ஒரு ரிஷி ஆனால் நானோ மீன் நாற்றம் உடைய மீனவப் பெண் ஆயிற்றே என்று கூறி தயங்கினாள். அப்போது பராசரர் அவள் மேனியிலிருந்து மீன் நாற்றம் போகச் செய்து மலர்களின் மணம் வீசச் செய்தார், மேலும் அவ்விடத்தில் இருள் சூழுமாறு செய்து அவளோடு கூடினார்.

காமத்தைக் கடந்து ஓர் நற்காரியத்திற்காக நிகழ்ந்த அந்த கூடலின் மூலம் ஓர் குழந்தை அவளுக்குப் பிறந்தது. இருள் சூழ்ந்த இடத்தில் அக்குழந்தை பிறந்தபடியால் மிகவும் கரிய வண்ணத்தில் இருந்தது. பராசரர் வரமளித்தபடியே அப்பெண்ணிற்கு மீண்டும் கன்னித் தன்மை கிடைத்தது. மேலும் அவளுக்குப் பராசரர் சத்தியவதி என்று பெயரளித்தார்.

பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேத வியாசர் ஆவார். ஒன்றாக இருந்த வேதங்களை ரிக் யஜூர் சாம அதர்வணம் என்று சதுர்வேதங்களாகத் தொகுத்துவரும் கிருஷ்ண த்வைபாயணர் என்று இயற்பெயர் கொண்ட ஸ்ரீவேத வியாசரே ஆவார். வியாசர் தன் தாயான சத்தியவதியிடம் அவர் மனதில் நினைத்து அழைக்கும் பொழுது தாம் வருவேன் என்று வாக்களித்து விட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வை மச்சகந்தி என்று அறியப்பட்ட சத்தியவதி சந்தணு மஹாராஜாவிடம் கூறி இதனாலேயே தன் உடலில் மலர் நறுமணம் வீசுகிறது என்று விளக்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *