சகுந்தலா துஷ்யந்தன்

Share this!
 • 37
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  37
  Shares

துஷ்யந்த மஹாராஜா ஒரு முறை காட்டிற்குச் சென்றிருந்தான். அவன் சென்ற வழியில் மகரிஷி கண்வரின் ஆசிரமம் இருந்தது. கண்வரைத் தனியாகச் சந்திக்க விரும்பிய துஷ்யந்தன் தன்னோடு கூட வந்தவர்களை வெளியே காத்திருக்குமாறு பணித்து விட்டு ஆசிரமத்தின் உள்ளே சென்றான். ஆனால் அப்போது அங்கு கண்வ மகரிஷி இல்லாமையால் அங்கிருந்த ஒரு பெண்ணால் வரவேற்கப்பட்டான். அவள் சகுந்தலை.

அவளைப் பற்றி கேட்ட துஷ்யந்தனுக்குத் தன்னைப் பற்றி கூறினாள் சகுந்தலை. விஸ்வாமித்திரரின் தவத்தைக் கண்டு இந்திரன் ஒருமுறை அஞ்சினான். அவரின் தவத்தைக் கலைக்கும் பொருட்டு மேனகையை பூலோகத்திற்கு அனுப்பினான். சஞ்சலப் பட்ட விஸ்வாமித்திரரும் அவளோடு கூடினார் அதனால் ஒரு பெண் மகவு பிறந்தது. மேனகை தேவலோகம் திரும்பும் பொழுது அக்குழந்தையை ஒரு ஆற்றங்கரையில் விட்டுச் சென்றாள். அக்குழந்தையை பறவைகள் சூழ்ந்து காத்தன. சகுந்தம் என்றால் பறவை என்றும் லா என்றால் ஏற்று கொள்ளுதல் என்றும் பொருள். அதனால் அக்குழந்தை சகுந்தலா என்று பெயர் பெற்றாள்.

பறவைகளின் மொழி அறிந்த கண்வர், பறவைகள் மூலம் நடந்ததை அறிந்து கொண்டு அக்குழந்தையை எடுத்து வளர்க்கலானார். இந்நிகழ்வை ஒரு முறை கண்வர் யாரிடமோ கூறியபோது அறிந்து கொண்ட சகுந்தலை தற்போது அதை துஷ்யந்தனிடம் கூறினாள். அவளின் மேல் விருப்பம் கொண்ட துஷ்யந்தன் அவளிடம் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டான். அப்போது வெளியே சென்ற கண்வர் திரும்ப வரட்டும் என்றும் அவருடைய சம்மதத்தோடு திருமணம் செய்யலாம் என்றும் பதிலுரைத்தாள் சகுந்தலை.

அப்போது எட்டுவகையான திருமணங்கள் யாவை என்று துஷ்யந்தன் சகுந்தலைக்கு விளக்கினான்:

பிராம்ம விவாஹம் – அலங்கரிக்கப்பட்ட மணமகளை மணமகனின் கையில் ஒப்படைப்பது
தைவ விவாஹம் – யாகம் ஒன்றை வளர்த்து அதன் முடிவில் யாகத்தை நடத்தியவருக்குக் காணிக்கையாய் மணமகளை ஒப்படைப்பது.
ஆர்ஷ விவாஹம் – இரண்டு பசுக்களை மணமகனிடம் இருந்து பெற்று கொண்டு மணமகளைக் கொடுப்பது.
ப்ராஜாபத்ய விவாஹம் – மணமகனும், மணமகளும் தர்ம வழியில் செல்லட்டும் என்று பெண்ணைக் கொடுப்பது.
அசுர விவாஹம் – பெருமளவு பொருளிற்கு ஈடாகப் பெண்ணைக் கொடுப்பது.
காந்தர்வ விவாஹம் – ஆணும் பெண்ணும் மனமொத்து தாங்களாகவே கூடிக் கொள்வது.
பைசாச விவாஹம் – தூக்கமல்லது, மது மயக்கத்தில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு செல்வது.
ராக்ஷச விவாஹம் – பலவந்தமாக அல்லது சண்டையிட்டு ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு செல்வது.

இவ்வாறு எண்வகைத் திருமணம் குறித்து விளக்கி பைசாச மற்றும் ராக்ஷச விவாஹம் தவிர மற்றயவை க்ஷத்திரியர்களுக்கு தர்மமாம விவாஹம் தான் என்று துஷ்யந்தன் கூறினான். ஆகையால் நாம் இருவரும் காந்தர்வ விவாஹம் புரியலாம் என்று துஷ்யந்தன் சகுந்தலையிடம் கூறினான். மேலும் அவர்களுக்குப் பிறக்கும் மகனையே தனக்குப் பிறகு பட்டதிற்கு வருவான் என்று வாக்களித்தான். இவ்வாறு சகுந்தலையோடு வாதம் புரிந்து அவளின் சம்மதத்தோடு அவளோடு கூடி பின்னர் ஊரறிய அவளை இராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வதாய் வாக்களித்து ஆசிரமம் விட்டுப் புறப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *