சர்ப்ப யாகம்

Share this!
 • 38
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  38
  Shares

பரிக்ஷ்த்து மஹாராஜாவின் முடிவைப் பற்றி தனது மந்திரிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட ஜனமேஜயன், உத்தங்கர் கூறியபடி சர்ப்ப யாகம் நடத்தத் தீர்மானித்து யாக சாலைகளை நிர்மாணிக்கக் கட்டளை இட்டான். யாக சாலைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் ஓர் புகழ் பெற்ற ஸ்தபதி யாக சாலைகளை நன்கு பார்த்து விட்டு, ஒரு பிராமணரின் குறுக்கீட்டால் இந்த யாகம் பாதிலேயே நின்று போகும் என்று கணித்துக் கூறினார்.

இதைக் கேட்ட ஜனமேஜயன் வருத்தப்பட்டாலும் யாகத்தைத் தொடங்கினான். புரோகிதர்கள் மந்திரம் ஓத ஓத பல பாம்புகள் நெருப்பில் வீழ்ந்து மடிந்தன. ஆனால் வெகு நேரமாகியும் தக்ஷகன் நெருப்பில் வந்து வீழவில்லை. புரோஹிதர்கள் மந்திரக் கட்டளை இட்டும் தக்ஷகன் வரவில்லை. அதே நேரம் ஆஸ்தீகர் என்ற முனிவர் யாக சாலைக்குப் பிரசன்னமானார். அவரை முறைப்படி வரவேற்று மரியாதை செய்தான் மன்னன் ஜனமேஜயன். இதற்கிடையில் மந்திரக் கட்டளைகளால் தக்ஷகனும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இந்திரதேவனும் குண்டத்தை நோக்கி விழத் தொடங்கினர். ஆபத்தை உணர்ந்த இந்திரன் தக்ஷகனை விட்டு விட தான் மட்டும் தப்பித்துக் கொண்டான். தக்ஷகன் தலைகீழாக அக்கினிக் குண்டத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தான். அப்போது ஜனமேஜயன் ஆஸ்தீகரிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுமாறு கூற, அவர் யாகத்தை நிறுத்துவதொன்றே தனக்கு வேண்டுமென்றும், தான் ஒரு நாககன்னிகைக்குப் பிறந்தவர், அந்நாககன்னிகையின் வேண்டுகோளின் பெயரிலேயே அவ்விடம் வந்ததாகவும் கூறி யாகத்தை நிறுத்தினார்.

அதனால் தக்ஷகன் குண்டத்தில் வீழ்வதிலிருந்து தப்பினான். யாகம் ஓர் அந்தணரால் பாதிலேயே நிற்கும் என்று முதலிலேயே சரியாகக் கணித்த ஸ்தபதிக்கும் வெகுமதிகள் அளித்து கௌரவித்தான் மன்னன் ஜனமேஜயன். ஆஸ்தீகர் கேட்டுக் கொண்டபடியால் யாகத்தை நிறுத்தியதால் மகிழ்ந்த முனிவர் ஜனமேஜயனுக்குப் பெரும் புண்ணியத்தையும், புகழையும் தரக் கூடிய அஸ்வமேத யாகத்தை நடத்தித் தரச் சம்மதித்தார். மேலும் தம் இனம் காக்க யாகத்தை நிறுத்தியபடியால் ஆஸ்தீகர் பெயரைச் சொல்லி வேண்டுபவர்களைத் தீண்டுவதில்லை என்று நாகங்களும் உறுதியளித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *