அரசனற்ற ஹஸ்தினாபுரமும் வியாசரின் நிபந்தனையும்

Share this!
 • 31
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  31
  Shares

விசித்திரவீர்யனுக்கும், அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கும் திருமணம் நடந்தேரியது. ஆயினும் புத்திர பாக்கியம் ஏதுமின்றி விசித்திரவீர்யன் சில காலத்திலேயே இறந்து போனான். ஹஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசினின்றி இருப்பதைக் கண்ட சத்தியவதியும் பிதாமகர் பீஷ்மரும் கவலையுற்றனர். இராஜ்ஜியத்தின் நலன் கருதி பீஷ்மரிடம் சத்தியவதி அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவருக்கும் புத்திர தானம் செய்யுமாரும் ஹஸ்தினாபுரத்தின் அரசனாய் முடிச்சூடுமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் தான் செய்த சத்தியத்தில் உறுதியாக இருந்த பீஷ்மர், “தாங்கள் என்னிடம் கேட்பது இராஜ்ஜியத்தின் நன்மைக்காக என்ற உன்னத நோக்கத்திற்காக என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும் என்னால் என் சத்தியத்தை மீற இயலாது. இயற்கை தன் குணத்தினை மாற்றி கொண்டாலும் பீஷ்மன் ஒரு போதும் சத்தியம் தவற மாட்டான்” என்று சத்தியவதியின் கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், “பெண்கள் இரகசியம் காப்பவர் தங்கள் பெற்றோர், கணவருக்குக் கூட தெரியாத இரகசியம் மனதிற்குள் வைத்திருப்பவர் ஆகையால் நீங்களே இதற்கு ஒரு நல்ல உபாயம் கூறவேண்டும்”, என்று சத்தியவதியிடம் வேண்டிக் கொண்டார். சத்தியவதி முன்னே நிகழ்ந்த ஸ்ரீவேத வியாசரின் பிறப்பு குறித்து கூறலானாள். “பீஷ்மா முன்னொரு சமயம் நான் பரிசல் விட்டுக் கொண்டிருந்த சமயம் நிகழ்ந்த புண்ணியக் காலத்தினைக் கருத்தில் கொண்டு பராசர மகரிஷி என்னுடன் கலந்து ஒரு மகனைப் பிறப்பிக்கச் செய்தார். அவனது பெயர் வியாசன். நற்காரியத்திற்காய் நிகழ்ந்த அந்தக் கூடலின் பின்னே பராசரரின் அருளால் நான் மீண்டும் கன்னித் தன்மை பெற்றேன். பராசரர் தன் மகனை அழைத்துச் செல்லும் முன்னே என்னிடம் தன்னை நினைத்து அழைக்கும் போது தான் வருவதாய் சத்தியம் செய்து சென்றான். தந்தை வழியே நீ விசித்திரவீர்யனுக்கு மூத்தவனாவாய், அதே போல தாயின் வழியில் வியாசன் விசித்திரவீர்யனுக்கு மூத்தவனாவான். உன் சத்தியத்தால் இராஜ்ஜிய நன்மைக்கு நீ புத்திர தானம் செய்ய விழையாததால் நான் வியாசனை அப்புண்ணிய காரியத்தைச் செய்ய அழைக்கவிருக்கிறேன்”, என்று கூறினாள்.

இதற்கு ஒப்புக் கொண்ட பீஷ்மர் வியாசரை அழைக்க சத்தியவதியிடம் வேண்டிக் கொண்டார். சத்தியவதி தன் மகனான வேத வியாசரை மனதால் நினைக்க அங்கே பிரசன்னமான வியாசர் தன் தாயிடம் தன்னை அழைத்தக் காரணத்தைக் கேட்டார். சத்தியவதி இராஜ்ஜியம் அரசனின்றி தவிப்பதையும், அரசகுமாரிகள் புத்திரரின்றி இருப்பதையும் ஆகவே இராஜ்ஜிய நன்மைக்காக புத்திர தானம் செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு ஒப்புக் கொண்ட ஸ்ரீவேத வியாசர் நிபந்தனை ஒன்றை விதித்தார். அதாவது, “இது புண்ணிய காரியமாதலால் இங்கே காமத்திற்கு இடமில்லை. ஆகவே நான் குரூரமான தோற்றத்துடனும், உடல் துர்நாற்றத்துடனும் வருவேன், அதை அப்பெண்கள் ஏற்று கொள்ள வேண்டும்”, என்று கூறினார். இதற்கு ஒப்புக் கொண்ட சத்தியவதி அம்பிகை, அம்பாலிகையோடு வாதம் புரிந்து அவர்களையும் ஏற்று கொள்ள வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *