பரிக்ஷித்து மஹாராஜாவின் மரணம்

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரிஷிகளின் மூலம் சாபத்தைப் பற்றி அறிந்து கொண்ட பரிக்ஷித்து மஹாராஜா ஒற்றை தூணால் மாளிகை ஒன்றினை அமைத்து அதனில் தஞ்சம் புகுந்தான். அந்த ஏழு நாட்களில் ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான சுக மகரிஷியின் வாயிலாக ஸ்ரீமத் பாகவதம் உபதேசம் பெற்றான். இந்நிலையில் காஷ்யபர் என்ற முனிவர் பரிக்ஷித்துவின் சாபம் குறித்து அறிந்தார். அவருடைய மந்திர சக்தியின் மூலம் தக்ஷகனின் விஷத்தை முறித்து பரிக்ஷித்துவின் உயிர் காக்கலாம் அதன் மூலம் தனக்குப் புண்ணியமும் அரசரின் மூலமும் பொருளும் கிட்டும் என்று முடிவு செய்து பரிக்ஷித்து மஹாராஜவைக் காணக் கிளம்பினார்.

இது குறித்து அறிந்த தக்ஷகன் ஒரு அந்தணர் வேடம் தரித்து காஷ்யபரை எதிர் கொண்டு நான் தான் தக்ஷகன் நானே பரிக்ஷித்துவைத் தீண்ட இருக்கிறேன். எனது விஷமானது மிகவும் சக்தி வாய்ந்தது, ஆகையால் உம்மால் அவரைக் காக்க இயலாது, மேலும் அவ்வாறு இயலாமல் போவது உமது பெருமைக்குத் தான் இழுக்கு என்றும் கூறினான். அதற்குக் காஷ்யபர் தன்னால் எத்தனை சக்தி வாய்ந்த விஷத்தையும் தன் மந்திர சக்தியால் முறிக்க இயலும் என்று பதிலுரைத்தார். தக்ஷகன், “நீர் கூறுவது உண்மையென்றால் நான் இப்போது இம்மரத்தில் என் விஷத்தினை இறக்குகிறேன், நீர் உம் மந்திர சக்தியால் அதை முறித்துக் காட்டினால் ஏற்று கொள்கிறேன்” என்று கூறி அருகிலிருந்த ஆலமரத்தில் தன் விஷத்தை பற்களால் இறக்கினான். காஷ்யபர், தக்ஷகனின் விஷத்தால் சாம்பலான மரத்தை உயிர்ப்பிக்க அதனது சாம்பலை எடுத்துக் குவித்து மந்திர உச்சாடனங்கள் செய்ய, சாம்பலில் இருந்து இலைகள் துளிர்த்து கிளைகள் பரப்பி முன்போல பெரியதாய் ஆலமரம் உயர்ந்து நின்றது.

காஷ்யபரின் மந்திர சக்தியைக் கண்டு அசந்து போன தக்ஷகன், பரிக்ஷித்து தன்னால் இறக்க வேண்டுமென்பது விதி, நீர் விதியை மாற்றியமைக்க முற்பட வேண்டாம் அது பாவம் என்றும், பரிக்ஷித்து மூலம் கிடைக்கும் பொருளை நானே தருகிறேன் என்று கூறினான். சிந்தித்த காஷ்யபர் பரிக்ஷித்து மஹாராஜாவின் ஆயுள் முடியவிருப்பதைத் தம் ஞான திருஷ்டியால் அறிந்து தக்ஷகன் கொடுத்த பொருளை ஏற்று கொண்டு திரும்பிச் சென்று விட்டார்.

பரிக்ஷித்து தங்கியிருந்த மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்ட பழங்களில், புழு உருவாய் தக்ஷகன் புகுந்து உள்ளே சென்றான். ஏழாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் விதிவசத்தால் கர்வம் கொண்ட பரிக்ஷித்து பழத்தில் இருந்த புழுவை எடுத்துத் தன் மேலே போட்டுக் கொண்டு இதுவே தக்ஷகன் ஆகுக இது என்னைத் தீண்டட்டும் என்று கூறி சிரித்தான். அப்போது பெரும் சீற்றத்துடன் புழு உருவில் இருந்த தக்ஷகன் பாம்பு உருவெடுத்து பரிக்ஷித்துவைத் தீண்ட, அங்கே பரிக்ஷித்து மரணமடைந்தான். தக்ஷகனின் விஷத்தின் வீரியத்தால் ஒற்றை தூண் தாங்கிய அந்த மாளிகை முழுவதும் நெருப்பிற்கு இரையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *