சந்தணு மஹாராஜா

Share this!
 • 31
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  31
  Shares

புமன்யூவிற்குப் பிறகு பல அரசர்கள் பாரதத்தை ஆண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர் அரசர் பிரதீபன். ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் வேதம் ஓதிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தேவலோக மங்கை அவரின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். பிரதீபன் அவரிடம், “நீ என் வலது தொடையில் அமர்ந்தமையால் எனக்கு மகள் அல்லது மருமகள் ஸ்தானத்தை அடைபவளாகிறாய். ஆகையால் உன்னை என் மகனுக்கு மணமுடிப்பேன்” என்று கூறினார். அதற்கு அவள் “உங்கள் மகன் நான் செய்யும் செயல்கள் எதையும் எதிர்த்துக் கேள்விகள் எழுப்பக் கூடாது, இந்த நிபந்தகைக்குக் கட்டுப்பட்டால் அவனை மணக்கச் சம்மதிக்கிறேன்” என்றாள்.

அவளின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்ட பிரதீபன் தன் மகனை அவனுக்கு மணமுடிப்பதாய் வாக்களித்தார். அவருடைய மகனே சந்தணு மஹாராஜா. பிரதீபன் தன் மகனான சந்தணுவிடம், “ஓர் தேவலோக மங்கையை நான் சந்தித்தேன். அவள் என் வலது தொடையில் அமர்ந்ததால் அவளை உனக்குத் திருமணம் செய்வித்து மருமகளாய் ஏற்பதாய் வாக்களித்தேன். ஆனால் அவள் செய்கைகள் எதற்கும் நீ அவளிடம் கேள்விகள் கேட்பதாகாது. இது நான் அவளுக்குக் கொடுத்துள்ள வாக்கு. அதை நீ பின்பற்றுவாயாக” என்று கூறினார்.

அதை ஏற்ற சந்தணு மஹாராஜாவை சில காலம் கழித்து அந்த தேவ லோக மங்கை சந்தித்தாள். பிரதீபனிடம் கூறிய அதே நிபந்தனைகளை சந்தணுவிடமும் கூறி அவனைத் திருமணம் செய்து கொண்டாள். நாட்கள் ஒடின சந்தணுவுக்கும் அந்த தேவலோக மங்கைக்கும் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த மங்கை நதிக் கரைக்குக் கொண்டு சென்று ஓடும் நீரில் அமிழ்த்துக் கொன்றாள். சந்தணுவினால் அவளை எதுவும் கேட்க இயலவில்லை நிபந்தனையின் காரணமாக. இவ்வாறு தங்களுக்குப் பிறந்த 7 குழந்தைகளையும் நீரில் அமிழ்த்திக் கொன்று விட்டாள் அந்தப் பெண்.

எட்டாவது குழந்தை பிறந்தவுடன் சந்தணுவால் அவளை எதுவும் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவளிடம் ஏன் 7 குழந்தைகளையும் கொன்றாய் என்றும் 8 வதாகப் பிறந்த மகனைக் கொல்ல அனுமதிக்க இயலாது என்றும் கூறினான். அவள் பேசத் தொடங்கினால், “நீர் உமது சத்தியத்தை மீறி விட்டமையாம் என்னால் இனி உம்மோடு இருக்க இயலாது. நீர் ஓர் அரசன் மட்டுமல்ல. பூர்வ ஜென்மத்தில் மஹாபிஷக் என்ற பெயருடைய அரசன். நீர் 100 ராஜசூய யாகங்கள் செய்தபடியால் சொர்க்கலோகத்தை அடைந்தீர். ஒருநாள் அங்கே காற்றில் எனது மேலாடை விலகியது. அங்கிருந்த மற்றவர் யாவரும் தம் தலையைக் குனிந்து கொண்டனர். ஆனால் நீர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தீர். மேலும் நானும் என் மேலாடைய உடனே திருத்தவில்லை. ஆகையால் நம் இருவரும் பூமியில் மானுடராய் பிறத்தல் வேண்டும் என்று பிரம்ம தேவர் சாபம் அளித்தார். ஏனெனில் மானிடர் காமத்தைக் கடந்தால் மட்டுமே மேலுலகை அடைய இயலும். நான் கங்கை ஆவேன்”, என்று கூறினாள்.

வியப்பில் ஆழ்ந்த சந்தணு மஹாராஜா ஏழு குழந்தைகளைக் கொன்ற காரணம் குறித்து கங்கா தேவியிடம் கேட்டான். அவள் அதற்கான காரணத்தைக் கூற தொடங்கினாள். வசுக்கள் எட்டுப்பேர். அவர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா என்று அழைக்கப்படுவர். ஒருமுறை பிரபாசா என்ற வசுவின் மனைவி, வஷிஷ்ட முனிவரின் ஆசிரமத்தில் உள்ள காமதேனு எனும் பசு தனக்கு வேண்டும் என்று பிரபாசாவிடம் கேட்டாள். ஆகையால் பிரபாசாவும் மற்ற ஏழு வசுக்களோடு வஷிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்து காமதேனுவைக் கவர்ந்து சென்று விட்டனர். தம் ஞான திருஷ்டியின் மூலம் இதை அறிந்து கொண்ட வஷிஷ்டர் வசுக்கள் எட்டுப் பேருக்கும் பூமியில் பிறக்குமாரு சாபம் அளிக்கிறார். பின்னர் வசுக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரபாசா தவிர்த்து மற்ற ஏழு பேரும் பூமியில் பிறந்த உடனே மேலுலகம் திரும்பு விடலாம் என்றும் பிரபாசா மட்டும் பல காலம் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஆன் மூலம் பல தர்ம கருத்துக்கள் பூமியில் உபதேசிக்கப் படும் என்றும் வரமளித்தார். அதன் பொருட்டு பூமியில் அவதரிக்க இருந்த என்னிடம் வசுக்கள் தங்களைப் பிறப்பித்து எழுவரை மட்டும் பிறந்தவுடன் கொன்றுவிடுமாறும் வேண்டிக் கொண்டனர். ஆகவே நான் ஏழுபேரையும் கொன்று விட்டேன். எட்டாவதாகப் பிறந்த இந்த புத்திரனை நான் கொல்லப் போவதில்லை. இவனுக்குக் கலைகள், கல்வி கற்பித்து உரிய வயதில் உம்மிடம் சேர்ப்பிப்பேன்”, என்று கூறி சந்தணுவை விட்டு நீங்கிப் போனாள் கங்காதேவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *