தேவவிரதன்

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபாசா என்ற வசு சந்தணு – கங்காதேவிக்குப் பிறந்த பின்னர் கங்கையால் அழைத்துச் செல்லப்பட்டு நன்முறையில் வளர்க்கப்பட்டான். கங்கையின் புத்திரனாதலால் காங்கேயன் என்ற பெயரிலும் தேவவிரதன் என்ற பெயரில் அறியப்பட்டான். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்த சந்தணு மஹாராஜா மான் ஒன்றினை துரத்திக் கொண்டு சென்றார். அப்போது நதிகளில் பிரதான நதியான கங்கை வற்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.

அப்போது நதியின் ஓர்புறத்தில் அம்புகள் ஆற்றின் நீரோட்டத்தை அணையிட்டுத் தடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து போனார். அவ்வாறு யார் நதிக்கு அணையிட்டிருக்க முடியும் என்று சுற்றிலும் பார்க்கையில், தேஜஸ் பொருந்திய இளைஞன் அவ்விடத்தில் இருப்பதைக் கண்டார். ஒருவேளை அது தன் மகனாய் இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கும் தோன்றி மறைந்திற்று. தம் மனதினுள் கங்கையை அவர் நினைத்து அழைக்க, நதியிலிருந்து கங்கா தேவி அவர் முன்னே தேவவிரதனோடு பிரசன்னமானாள்.

சற்றுமுன் நதியில் சரங்களைக் கொண்டு அணையிட்டிருந்த அந்த இளைஞன் கங்காதேவியோடு வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார். அவ்விளைஞன் தன் மகனாகவே இருக்கக் கூடும் என்று பெரிதும் நம்பினார். கங்காதேவி சந்தணு மஹாராஜாவிடம், சூரியனைப் போன்றவரே இவனே உம் புத்திரன், தேவவிரதன். இவன் சகல தர்மங்களும், கலைகளும், ஆயுதப் பிரயோகமும் அறிந்தவன். வஷிஷ்டரிடம் வேதம் கற்றவன். தேவகுரு பிரஹஸ்பதியிடம் சாஸ்திரங்களைக் கற்றவன். சுக்ராச்சாரியாரிடம் தர்மம் கற்றவன். பரசுராமரிடம் ஆயுதக் கலை கற்றவன். எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்கத் தெரிந்த இவன் அரச நியதிகளும் அறிந்தவன். இவனைத் தம்மோடு அழைத்துச் செல்வீராக என்று ஒப்படைத்தாள் கங்காதேவி.

தேவவிரதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த பெருமை கொண்ட சந்தணு மஹாராஜா தேவவிரதனைத் தம்மோடு தன் இராஜ்ஜியமான ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்று அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். தேவவிரதன் தன் தந்தையை மட்டுமல்லாது தம் குடிமக்களையும் மிக்க மகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *