சித்ராங்கதனும் விசித்திரவீர்யனும்

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பின் சத்தியவதிக்கும் சந்தணுவுக்கும் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீர்யன் என இரு புத்திரர்கள் பிறந்தனர். சில காலத்திலேயே சந்தணு சொர்க்கம் புறப்பட்டு விட்டார். பின்னர் சித்ராங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து வைக்கப்பட்டது. ஆனால் சித்ராங்கதன் என்ற பெயருடைய கந்தர்வன் ஒருவன் சந்தணுவின் மகனான சித்ராங்கதனைக் பகை எதுவும் இன்றி ஒரே பெயரை உடைய காரணத்திற்காக போருக்கு அழைத்தான். மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்த அந்தப் போரில் கந்தர்வன் சந்தணுவின் மகனைக் கொன்று விட்டான். ஆதலினால் பீஷ்மர் விசித்திரவீர்யனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கினார்.

அவ்வாறு இருக்க காசி தேசத்து இராஜன் தன் மகள்கள் மூவருக்கும் திருமணம் செய்விக்கும் பொருட்டு சுயம்வரம் ஒன்றை நடத்தினார். அச்சுயம்வரத்தில் விசித்திரவீர்யனுக்கு பெண் தேர்ந்தெடுக்க பீஷ்மர் காசி தேசம் சென்று சுயம்வரத்தில் கலந்து கொண்டார். பிரம்மச்சரிய விரதம் என்று சத்தியம் செய்த கிழவரோ இன்று சுயம்வரத்தில் பங்கெடுக்கிறார் என்று அங்கு வந்திருந்த பிற அரசர்கள் கிண்டலாய் பேசிச் சிரிக்க, சினம் கொண்ட பீஷ்மரோ நான் இப்பெண்கள் மூவரையும் கவர்ந்து செல்கிறேன். திராணியுள்ள அரசர்கள் யாராயினும் என் மேல் போர் தொடுத்து என்னைத் தடுக்கலாம் என்று கூறி அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூன்று பெண்களையும் தன் தேரில் ஏற்றி கொண்டார்.

இதனால் சினந்த மற்ற அரசர்கள் பீஷ்மருக்கு எதிராகப் போர் தொடுக்கத் திரண்டனர். ஒரு பக்கம் சுயம்வரத்திற்கு வந்திருந்த நூற்றுகணக்கான அரசர்களும் மறுபக்கம் அவர்களை எதிர்த்து பீஷ்மர் என்ற ஒற்றை மனிதர் மட்டும் என்று போர் தொடங்கியது. இரு தரப்பிற்கும் இடையேயான போர் வெகு உக்கிரமாக இருந்தது. பீஷ்மரின் கணையில் இருந்து புறப்பட்ட அஸ்திரங்களும் சஸ்திரங்களும் பல அரசர்களையும், அவர்களது குதிரை, சாரதி ஆகியோரின் உயிரைக் குடித்தன. இறுதியாக பீஷ்மர் அனைவரையும் வென்று அம்மூன்று பெண்களோடு அஸ்தினாபுரம் நோக்கிப் பயணமானார். ஆனால் சால்வன் என்ற அரசன் மட்டும் பீஷ்மரைத் துரத்தி வர பீஷ்மர் அவரோடு போர் புரிந்தார். தொடக்கத்தில் சால்வனின் கை ஓங்கியது போல அமைந்தது. அதனால் அங்கு கூடியிருந்த மற்ற அரசர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் பெரிதும் சினமுற்ற பீஷ்மர் பல கணைகள் கொண்டு சால்வனை உக்கிரமாகக் காயப்படுத்தி வென்றார். பீஷ்மரிடம் தோற்ற சால்வன் தன் தேசத்திற்குத் திரும்பி நல்லாட்சி புரிந்தான்.

இராஜ்ஜியத்திற்குத் திரும்பிய பீஷ்மர் விசித்திரவீர்யனுக்கு அம்மூன்று பெண்களையும் திருமணம் செய்விக்க முடிவு செய்தார். திருமண நாளில் அம்பை தான் சால்வ தேசத்து அரசரை விரும்புவதாகவும் அவனும் தன்னை விரும்புவதாகவும் ஆக தன்னைச் செல்ல அனுமதிப்பதே தர்மம் என்று கூறினாள். அவளது கூற்றை நன்கு ஆலோசித்த பீஷ்மர், ஒரு பெண் ஓர் ஆடவனை விரும்பும் பொழுது அவனோடு சேர்ந்து வாழ்வதே தகும் என்று கூறி அம்பை செல்ல அனுமதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *