பீஷ்மர்

Share this!
 • 33
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  33
  Shares

தன் பெயருக்கான காரணத்தை விளக்கிய சத்தியவதியின் மீது சந்தணு மஹாராஜாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்தது. அவர் அதனை அவளிடம் வெளிப்படுத்த, அதற்கு தன் தந்தையே முடிவு செய்தல் வேண்டும் என்றும் தான் முடிவெடுக்க இயலாது என்று சத்தியவதி கூறுகிறாள். அவளின் மொழி கேட்ட பின் சந்தணு அந்த மீனவர் தலைவரைச் சந்தித்து சத்தியவதியை மணம் முடித்துக் கொள்ள தன் ஆசையைத் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கு அந்த மீனவர் தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை.

“ஒருவேளை தாம் தற்போது முடிசூட்டியுள்ள புத்திரன் தேவவிரதனோ இல்லை அவனது வாரிசுகளுக்கு இராஜ்ஜியம் இல்லை ஆனால் எனது மகளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்குத் தான் இராஜ்ஜியம் என்று சந்தணு வாக்களித்தால் அவளை மணமுடித்துத் தருவேன்”, என்று அந்த மீனவர் தலைவன் கூறினான். இதனால் பெரிதும் கோபமுற்ற சந்தணு பதில் ஏதும் உரைக்காமல் நாடு திரும்பினார். ஆனாலும் அவரால் சத்தியவதியை மறக்க இயலவில்லை. அவரது மனம் வெகுவாகச் சஞ்சலம் அடைந்திருந்தது. இதை தேவவிரதனும் அறியாமல் இல்லை.

சந்தணு மஹாராஜாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவனால் என்ன யூகித்தும் அறிந்து கொள்ள இயலவில்லை. சந்தணுவிடம் தேவவிரதன் ஆலோசித்தும் அது குறித்த சரியான தகவல்கள் அவனுக்குக் கிட்டவில்லை. ஆகையால் சந்தணுவின் தேரோட்டியை அழைத்த தேவவிரதன், அனைத்துக் காலங்களிலும் நீரே எம் தந்தைக்கு சிநேகிதராக இருக்கிறீர். ஆகவே அவருடைய தற்போதைய துயர் குறித்தும் நீர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இராஜ்ஜியத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நீர் அதை எனக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மன்னரின் துயரினை நாம் மாற்ற இயலும் என்று கேட்டுக் கொண்டான்.

சந்தணு மஹாராஜாவின் தேரோட்டி, சந்தணுவிற்கு சத்தியவதி மீதான ஆசையையும், மீனவர் தலைவரிடம் நந்த உரையாடல்கள், மீனவர் தலைவனின் நிபந்தனைகள், அதனால் மன்னனுக்கு ஏற்பட்ட கோபம் ஆகியவற்றை விளக்கிக் கூறினான். இதையறிந்த தேவவிரதன், ஒரு தீர்மானத்தோடு, சந்தணுவின் தேரோட்டியோடு மீனவர் தலைவனைச் சந்திக்கச் சென்றான்.

அந்த மீனவர் தலைவனைச் சந்திந்த தேவவிரதன், அவரிடம் இனி நான் இராஜ்ஜியத்திற்கு உரிமை கொண்டாட மாட்டேன் என்று பிரமானம் செய்கிறேன். ஆகையால் தாம் தம்மகளை என் தந்தைக்கு அளிக்கலாம் என்று கோரினான். ஆனால் அதற்கு அந்த மீனவர் தலைவன், நீ தற்போது உம் தந்தைக்காக இராஜ்ஜியத்தைத் தியாகம் செய்யலாம் ஆனால் நாளை உமது வாரிசுகள் இராஜ்ஜியத்திற்கு உரிமை கோரவோ, போர் தொடுக்கவோ மாட்டார்கள் என்ற எந்த நிச்சயமும் இல்லை என்று கூறினான். இதைக் கேட்ட தேவவிரதன் பெரும் சத்தியம் ஒன்றை செய்தான். “இதுமுதல் நான் எப்போதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். நான் திருமணம் செய்வதோ இல்லை யாரேனும் பெண் ஒருவரோடு கூடுதலோ எனக்குத் தகாது. நான் எப்போதும் புத்திரனற்றவனாவேன்”, என்று தன் தந்தையின் திருமணத்திற்காக பெரும் சத்தியத்தைச் செய்தான் தேவவிரதன்.

வானில் இருந்த தேவர்கள் அனைவரும் தேவவிரதனின் மேல் பூமாரி பொழிந்து பீஷ்ம பீஷ்ம என்று முழங்கினர். பீஷ்ம என்னும் சொல்லுக்கு பயங்கரமான சபதத்தை ஏற்பவன் எனப் பொருள். பின்னர் சத்தியவதியைத் தன் தேரில் ஏற்றி கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பிய பீஷ்மர் தன் தந்தையிடம் நடந்ததை விவரித்தார். தன் புத்திரனின் செயற்கரிய செயலால் பெரிதும் மகிழ்ச்சியுற்ற சந்தணு பீஷ்மருக்கு வரமொன்றை அளித்தார். அதாவது, பீஷ்மர் விரும்பும் நேரமே அவரை மரணம் அணுகும் என்பதே அவ்வரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *