உத்தங்கரின் கோபம்

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பரீக்ஷித்து மஹாராஜாவின் புதல்வன் மன்னன் ஜனமேஜயன். மன்னரான பரீக்ஷித்து இறந்த பின்னால் ஜனமேஜயனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.

ஒரு சமயம் மன்னர் ஜனமேஜயனை உத்தங்கர் என்ற ரிஷி சந்தித்தார். உத்தங்கர் ஜனமேஜயனிடம் சர்ப்ப யாகம் ஒன்றை நடத்துமாறு கூறுகிறார். ஜனமேஜயனின் தந்தையான பரீக்ஷித்து மஹாராஜா பாம்புகளின் அரசனான தக்ஷகன் தீண்டியதால் இறந்ததாகவும், தனக்கும் இன்னல்கள் கொடுத்ததாகவும் கூறி சர்ப்ப யாகம் நடத்தக் கூறுகிறார்.

உத்தங்கர் தனக்கு தக்ஷகன் இழைத்த இன்னல்களைக் கூறுதல்:

உத்தங்கர் ரிஷி தனது குருகுலக் கல்வியை வேதா என்பவரிடம் கற்றார். கல்வியில் தேர்ச்சியுற்ற நிலையில் உத்தங்கரின் குருவானவர் அவரை விடைபெற பணித்தார். கல்வி இலவசமாகப் பெறுதல் கூடாது என்பதனை உணர்ந்த உத்தங்கர் தனது குருவிற்குக் காணிக்கை செலுத்த விரும்பி தனது குருவிடம் பணிந்து குருவிற்குத் தேவையானதைக் கேட்டார்.

குரு உத்தங்கரைச் சிறிது காலம் பொறுத்திருக்கக் கூறினார். சிறிது காலம் கழித்து மீண்டும் உத்தங்கர் குருவை வேண்டிக் கொள்ள, தம் மனைவியிடம் என்ன வேண்டுமென்று கேட்டு அவருக்கு வேண்டியதைக் கொடுத்தால் போதுமென்று பதிலளித்தார் குரு.

குருவின் ஆணைப்படி உத்தங்கர் குருபத்தினியிடம் யாது வேண்டுமென்று கேட்க, குருபத்தினி பௌசிய மன்னனின் மனைவியான அரசி காதில் அணிந்திருக்கும் குண்டலங்கள் வேண்டுமென்று கேட்டாள்.

குருபத்தினி கூறியபடியே உத்தங்கர் பௌசிய மன்னனைச் சந்தித்துப் பின் அவரது அரசியைச் சந்தித்து குண்டலங்களை யாசகம் வேண்டுகிறார். அரசியும் உத்தங்கர் வேண்டிய குண்டலங்களைக் கொடுத்து அவற்றின் மீது தக்ஷகன் ஆசை கொண்டிருப்பதையும், அதனால் அவற்றை கவனமோடு கொண்டு செல்லுமாறும் கூறினார்.

குண்டலங்களைப் பெற்று கொண்டு உத்தங்கர் அவற்றை தன் குருபத்தினியிடம் கொண்டு சேர்க்க பயணப்பட்டார். ஆனால் வழியில் உத்தங்கரிடம் இருந்து குண்டலங்களை தக்ஷகன் களவாடி விட்டான்.

பின்னர் சிறிய போராட்டத்திற்குப் பிறகு தக்ஷகனின் இருப்பிடத்திலிருந்து குண்டலங்களை தங்க்ஷனிடம் இருந்து பெற்று கொண்டு தன் குருவின் இருப்பிடத்திற்கு வந்தார் உத்தங்கர். மகிழ்ந்த குருபத்தினி உத்தங்கரை வாழ்த்தி அனுப்பினார்.

தக்ஷகனின் மீது பெரும் கோபத்தில் இருந்த உத்தங்கர் விரைவாக அஸ்தினாபுரம் நோக்கிப் பயணப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *